புதுச்சேரி – லாஸ்பேட்டையில் காவல்நிலையம் முன் வெட்டப்பட்ட ரவுடி உயிரிழப்பு!
புதுச்சேரியில் நேற்று முன்தினம் லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் வாயில் முன்பு மர்மநபர்களால் வெட்டப்பட்ட ரவுடி ஜாக்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜாக்பால் வெட்டப்பட்ட பிறகு, இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் கீழே தவறி விழுந்ததில் 2பேருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் மாஸாக முகத்தை காட்டி ரீல்ஸ் மற்றும் போட்டோ வெளியிட்டதால் ஆத்திரத்தில் கத்தியால் முகத்தை வெட்டி சிதைத்ததாகவும் அவரை கொலை செய்ய ரூட் போட்டுக் கொடுத்ததே இன்ஸ்டாகிராம் தான் என கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரின் விசாரணையில் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி,லாஸ்பேட்டை, நாவர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்கப்பால் (23), ரவுடியான இவர் மீது, கொலை முயற்சி,அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. காய்கறி வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இவரது நண்பரின் மகள் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை கவனித்து விட்டு காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரை காவல் நிலைய வாசலில் வைத்து அறிவாளால் முகம் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.இந்நிலையில் உயிருக்கு போராடிய ஜாக்கப்பாலை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய சண்முகாபுரத்தை சேர்ந்த பச்சையப்பன்(22), முகிலன்(21) மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் மேட்டுப்பாளையம் லாரி பணி முனையில் பதுங்கி இருந்தனர்.அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, கீழே விழுந்ததில் பச்சையப்பன் மற்றும் முகிலன் ஆகியோரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த மே மாதம் காதல் தகராறில்,பஞ்சாயத்து செய்தில்,பச்சையப்பன் உட்பட 3 பேரை, ஜாக்கப்பால் கத்தியால் வெட்டியுள்ளார். இந்த வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்த ஜாக்கப்பால் மீண்டும் பச்சையப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டி ரவுடி மிட்டாய் மணி என்பவரை அணுகி,ரூட்போட்டு தரும்படி கேட்டுள்ளார்.அதனை மிட்டாய்மணி, பச்சையப்பனிடம் தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த பச்சையப்பன், தன்னை கொலை செய்வதற்குள், ஜாக்கப்பாலை கொலை செய்ய, திட்டம் தீட்டிவந்துள்ளார்.
இதற்கிடையே, இன்ஸ்டாகிராமில் ஜாக்கப்பால், தனது நண்பரின் மகள் பிறந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பதிவிட்டு வந்துள்ளார். அதைகண்காணித்த பச்சையப்பன்,பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஜாக்கப் பால் செல்வதை அறிந்து தனது கூட்டாளிகளுடன், லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அருகே பதுங்கி இருந்து, பைக்கில் வந்த ஜாக்கப்பாலை சுற்றி வளைத்து வெட்டியதாக தெரிவித்துள்ளார்.மேலும் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய ரவுடி போல் மாஸாக வீடியோ பதிவிடுவது போட்டோ பதிவிடுவது என அடிக்கடி முகத்தை காட்டியது ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும் அதன் காரணமாக, கத்தியால் முகத்தை குறிவைத்து சிதைத்து கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததையடுத்து 4 பேரை கைது செய்த போலீசார். அவர்களிடமிருந்து மூன்று மொபைல்கள், 2 பைக் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய 4 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பச்சையப்பன்,முகிலன் காலாப்பட்டு மத்திய சிறையிலும், சிறுவர்கள் சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சந்துரு என்பவரை தேடி போலீசார் வருகின்றனர்.


