அரியாங்குப்பத்தில் திருநங்கைகள் நினைவு தினம் அனுசரிப்பு : மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
பாலின வேறுபாட்டினால் ஏற்படும் வன்முறை மற்றும் சமூக ஒதுக்கல் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், ‘திருநங்கைகள் நினைவு தினம்’ (Transgender Day of Remembrance) அரியாங்குப்பத்தில் நேற்று மாலை அனுசரிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திருநங்கைகள் சமூதாயம் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் அநீதி காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அதனை முன்னிட்டு, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு, அறிவாள சுகாதார முன்முயற்சி அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், முதலில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கத்திலிருந்து மெழுகுவர்த்தி மற்றும் விழிப்புணர்வு பதாகைகளுடன் நினைவு பேரணி தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் இதில் பங்கேற்று, உயிரிழந்தவர்களின் நினைவாக அமைதியாக நடந்தனர்.
நிர்வாகிகள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பின் நிறுவனர்–தலைவர் முனைவர் ஷீதல் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வை தலைமை தாங்கினர்.
இந்த நினைவு தினம், பாலின வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


