IND vs RSA: இரண்டாவது டெஸ்டில் சுப்மன் கில்லுக்கு பதில் இவரா?
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தென்னாப்பிரிக்க அணி இந்தியா சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்ததால், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நாளை மறுநாள் கவுகாத்தியில் இரண்டாவது டெஸ்ட்டில் முழு கவனத்துடன் இறங்கவுள்ளது.
ஆனால், முதல் போட்டியில் காயம் அடைந்த சுப்மன் கில் இந்தப் போட்டியில் விளையாட முடியாது என உறுதியாகியுள்ளது. கில் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த போட்டியில் அவர் ஓரளவு விளையாடியிருந்தால் முடிவு மாறியிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கில் இல்லாத சூழலில் யாரை மாற்று வீரராக தேர்வு செய்வது என ஆலோசனை நடந்த நிலையில், இளம் வீரர் சாய் சுதர்சன் இரண்டாவது டெஸ்டில் வாய்ப்பு பெறுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 24 வயதான சாய் சுதர்சன் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் 273 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதற்கிடையில், சுப்மன் கில் முழுமையாக குணமடைய குறைந்தது 10 நாட்கள் ஓய்வு அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 30ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க அவர் ஓய்வில் இருக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக வெளியில் இருப்பதால், அவர் ODI தொடரில் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.


