Headlines

அன்பை பொழிந்த ட்ரம்ப்-ஜி ஜின்பிங் : புதிய உலக அரசியல் சலசலப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசினார் என்று சமூக வலைத்தள பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். உரையாடல் நேரத்தில், ஜி ஜின்பிங் சீனாவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், ட்ரம்ப் தாமும் ஜி ஜின்பிங்கை அமெரிக்க வர அழைத்ததாகவும், அந்த அழைப்பை சீன அதிபர் ஏற்றுக்கொண்டதால் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவிற்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவாக உள்ளது,” என ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது கவனம் ஈர்த்துள்ளது.

பல பிரச்சினைகள் குறித்து விவாதம்

இரு தலைவர்களும் உக்ரைன் நிலைமை, அமெரிக்க சோயாபீன்ஸ் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளனர். வரி விதிப்பு காரணமாக அமெரிக்கா-சீனா உறவில் ஏற்பட்டிருந்த பதற்றத்தைத் தொடர்ந்து, தென்கொரியாவில் இவர்கள் நேருக்கு நேர் சந்தித்திருந்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இருதரப்பும் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தைவான் விவகாரம்: சீனா-ஜப்பான் உறவில் பதட்டம்

இதற்கிடையில், தைவான் குறித்து ஜப்பான் தரப்பில் வெளிப்பட்ட கருத்துகளால் சீனா-ஜப்பான் நாடுகளுக்கிடையே புதிய மோதல் வெடித்துள்ளது. இந்த தொலைபேசி உரையாடலில் தைவான் பிரச்சினை குறித்து ட்ரம்ப் எவ்வித குறிப்பும் செய்யாதது கவனிக்கப்படுகின்றது.

சீனா தொடர்ந்து, “தைவான் என்பது சீனாவின் உட்பகுதியே” என்று வலியுறுத்தி வருகிறது. தைவானின் சுயாட்சியை ஆதரிக்கும் எந்த கருத்துக்கும் சீனா கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது.

முன்னதாக, தைவானுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் நடைபெற்றால், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாடான ஜப்பானின் இராணுவம் இதில் ஈடுபடக்கூடும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி எச்சரித்திருந்தார். இதனால், தைவான் விவகாரம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மீண்டும் அரசியல் நெருக்கடியை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *