டிட்வா புயல் தளர்ந்து உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் ஏன் நகரவில்லை ? : வானிலை நிபுணர்கள் விளக்கம்
சென்னை:
சமீபத்தில் வங்கக்கடலில் உருவாகி வந்த டிட்வா புயல், தனது வலிமையை இழந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே, சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், கடந்த பல மணி நேரமாக ஒரே இடத்தில் நகராமல் சுழன்று கொண்டிருப்பது வானிலை ஆராய்ச்சியாளர்களை கவனிக்க வைத்துள்ளது.
இந்த மண்டலம் நகராமல் நிலை கொண்டிருப்பதே சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்ய முக்கிய காரணமாகும். மழை உருவாக்கும் மேகங்கள் தொடர்ந்து அதே பகுதியில் நிற்கும் காரணத்தால், நகரம் மற்றும் புறநகர் பகுதிகள் இடைவிடாத மற்றும் கனமழையை அனுபவித்து வருகின்றன.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏன் நகரவில்லை என்ற கேள்விக்கு வானிலை நிபுணர்கள் வழங்கும் விளக்கம் இதுதான்:
- இமயமலையின் மேற்கத்திய தாழ்வு நிலை ஊருடுவல் (Western Disturbance Interaction)
- பசுபிக் கடலில் உருவாகி இருக்கும் உயர் அழுத்த பகுதிகள் (Pacific High Pressure Block)
இவை இரண்டும் இணைந்து, தாழ்வு மண்டலத்தின் இயல்பான நகர்வை தடை செய்கின்றன. அதன் காரணமாக, இந்த அமைப்பு வங்கக்கடலின் அதே பகுதியில் ‘பிளாக்’ நிலைத்து நிற்கிறது.
இதனால் அடுத்த சில மணி நேரங்களும் சென்னையின் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் நீர்த்தேக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


